பெற்றவர்களின் சண்டையால் குழந்தைகள் மனம் பாதிக்கப் படுமா?
இரு மனங்கள் இணைந்த திருமண வாழ்க்கையில் புது வரவாய் சின்னமலர். ஆயிரம் கனவுகளோடு உருவாகும் அந்த மலர் கையில் கிடைத்ததும், அதன் ஸ்பரிசத்தை உணர்ந்து உச்சிமுகர்ந்து ஆனந்த சுவாசத்தை அனுபவிக்கும் ஆனந்தம் அளவிடற்கரிய பேரின்பம் என்பது ஒவ்வொரு தம்பதியினரும் உணர்ந்த உண்மை.
அந்தப் பொறுப்பை பாதுகாக்க வேண்டிய முழு பொறுப்பும் பெற்றோர்களுக்கு உண்டு என்பதை மறப்பது என்பது இல்லை எனினும் கால சூழ்நிலை மாற்றுவது என்பது உண்மையே .
தம்பதியினர் சற்றே சிந்திக்க...
விட்டுக்கொடுத்தல் மறந்து, வீம்பு எனும் சுயகௌரவம் சற்றே எட்டிப்பார்த்து சிரிக்கையில், அதன் தலையை சற்றே தட்டி விட்டால் பிறகு வீம்பு என்பது ஏது ! விவாதம் என்பது ஏது! வரட்டுப் பிடிவாதம் தான் ஏது!
கணவனின் பாசத்தின் சிக்குண்டு , தன் கண்களை கட்டுண்ட காந்தாரி. அதனால் தாய்மாமன் வசம் வளர்ந்து தீயவன் எனும் குணம் பெற்ற துரியோதனன் வாழ்வு சீர்கெட்டதை மகாபாரதத்தில் கண்டோம்.(கௌரவர்கள்)
கணவனே இல்லை எனினும் நல்ல முறையில் கண்மணிகளாய் வளர்த்து பொன்மணிகளாய் உருவாக்கிய குந்தியின் பெருமைகளையும் அதே மகாபாரதத்தில் காண்கின்றோம்(பாண்டவர்கள்)
குழந்தைகள் கண்கொண்டு வளர்த்தால் அந்த குழந்தை நல்வழியில் சீர் பெறும் என்பதை அறிந்தும் காலவசம் கலைகின்ற வாழ்வின் சோதனையில் ஆட்கொண்டு துன்புறுகின்றோம்.
அதற்கு ஒரே தீர்வு நம் வாழ்வை விட நம் குழந்தையின் எதிர்காலம் முக்கியம் என கருத்தில் கொண்டால் , நிச்சயம் கருத்து வேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
பெற்றவர்கள் சண்டையால் அவர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் அன்பு இல்லாது , படிப்பில் நாட்டம் இல்லாது , உற்சாகம் மறைந்து உள்ளத்தில் சோகம் குடி கொண்டு வாழ்வில் பிஞ்சுக் குழந்தைகள் மனம் பாதிப்புக்கு உள்ளாகும் .
.
ஓடும் மான்குட்டி காலில் அம்பு பட்டால்...
காற்று நிறைந்த பலூன் ஆடி ஆடி குதித்து விளையாட , அதன்மேல் ஒரு ஊசிபட்டால் ..
பசி கொண்ட பறவைகுஞ்சு தாயின் வரவு எதிர்பார்த்து ஏமாந்து போனால்....
இதுதான் ஒரு குழந்தையின் நிலைமை . இந்த நிலையை குழந்தைகளுக்கு தயவு செய்து கொடுத்து விடாதீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக