வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

வரலட்சுமி விரதம்


வரலட்சுமி நோன்பு



 

வரலட்சுமி விரதம் அன்று சொல்லக்கூடிய முக்கியமான ஸ்லோகம் 

மனைவி என்பவள் ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்களைவிட சிறந்தவள் ஆவாள்  என்று காயத்ரி மந்திரம் கூறுகின்றது. அவளுடைய கழுத்தில் இருக்கும் மாங்கல்யம் 9 இழைகளைக் கொண்டதாக அமைகின்றது .

அந்த ஒவ்வொரு இழையுமே   நமக்கு ஒரு கருத்தைச் சொல்கின்றது.

இழை (1) வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும் .

(2 ) மேன்மை உடையவளாய் திகழ வேண்டும்.

(3) ஆற்றல் மிக்கவளாய் சிறக்க வேண்டும்.

(4) ‌ தூய்மை கொண்டவளாய் இருக்க வேண்டும்.

(5) ‌ தெய்வீக பக்தியோடு

(6) ‌ உத்தம குணங்களோடு

 (7) ‌விவேகத்தோடு

(8) ‌தன்னடக்கத்தோடு

 (9) ‌பொறுமையோடும்  ஒரு பெண்

திகழ வேண்டும் என்பதே  மாங்கல்யத்தின் இலக்கணம் ஆகும். அந்த மாங்கல்யமே மங்களத்தின் அடையாளமாகத் திகழ்கின்றது.






ஒவ்வொரு பெண்ணும் வரலட்சுமி நோன்பு அன்று  உச்சரிக்கக் கூடிய மந்திரமாக விளங்குவது 

மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேதுநா
 கண்டே பத்நாமி ஸுபகே
சஞ்சீவ சரதம் சதம்.

மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நிற்பதற்கு செல்வ  செழிப்பு  பெருகுவதற்கு

 ஆரோக்கியம் நலம் தருவதற்கு

 நிம்மதியான வாழ்வு கொடுத்து வாழ்வில் வளம் பெறுவதற்கு சுமங்கலி பெண்கள் அனைவரும்  வரலட்சுமி நோன்பான இந்தச் சிறப்பு தினத்தில் 27 ,  54  அல்லது 108 முறையென முடிந்தவரை சொல்லவே. தெய்வீக ஒளி இல்லத்தில்  நிறைந்து வாழ்வில் இனிது காண்கவே.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌷

ஆன்மீக கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால் கமெண்ட் இல் பகிரவும் அதற்கான பதிலை அடுத்த பதிவில் அளிக்கிறேன்




புதன், 25 ஜூன், 2025

ஆடி மாதம் பிறந்தாச்சு!



 

ஆடி மாதம் பிறந்தாச்சு!




ஆடி மாதத்தின் சிறப்புகளை முன் கூட்டியே தெரிந்து கொண்டோம் என்றால் அதற்கேற்ப விரத முறைகளை முன்னேற்பாடாக செய்து கொள்வது நிறைய நன்மைகள் தரும்.

நம் கண்ணெதிரே தெய்வீக பலன் கிடைக்க பல வழிகள் இருந்தாலும் அதை காணாது மனம் தளர்வதும் துன்பத்தில் துவண்டு விழுவதும் இயல்பு . தெய்வீக வழிபாடு செய்து வழிபட்டால் நிச்சயம் துன்பத்தில் இருந்து விடுபடலாம்.

 அப்படிப்பட்ட தெய்வ வழிபாடுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆடி மாதத்தில் வரக்கூடிய அம்மன் வழிபாடு. 

ஆடி மாதத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன? 




அம்மனை நினைத்து விரதங்கள் இருந்து அவளுடைய மகிமைகளை படிப்பது, சுலோகங்கள் படிப்பது,  நிறைய நேரங்களை தெய்வத்திற்காக செலவிடுவது என ஆடி மாதத்தில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க . 

நினைத்த காரியங்கள் அனைத்தும் அடுத்து வரும் சுபா முகூர்த்த ஆவணி மாதத்தில் நிச்சயம் நடைபெறும் என்பதிலும் உறுதிகொள்க .

ஆடி மாதத்திற்குரிய சிறப்புகள் என்ன? 




ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு சிறப்புக்குறிய மாதம் ஆகும். அம்மனுக்கு பிடித்தமான வேப்பிலையை வீடு முழுக்க கமழ  செய்வது ஆடி மாதத்திற்குரிய சிறப்பாகும் . அம்மனுடைய அருள் பூரணமாக நிறைந்து வீட்டினில் சுபிட்சம் நிலவ நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய முதல் பதிவாக தங்களுக்கு எழுதுகிறேன்.

நம்முடைய வீட்டில் அம்மனை வருக வருக என  வரவேற்று நம் இல்லத்தில் தெய்வீக மணம் மணப்பதற்கான தேடல்தான் தெய்வீக மணம் கொண்ட வேப்பிலை ஆகும்.

வேப்பிலை மரம் உங்கள் வீட்டின் அருகில் இருக்கின்றதா ?




வேப்பிலை மரம் உங்கள் வீட்டின் அருகில் இருக்கின்றதா!  என்பதை தெரிந்து கொள்ளுங்கள் அல்லது வேப்பிலை மரக்கன்றுகள் நீங்கள் போகும் வழியில் கிராமத்து பக்கங்களில் நிறைய சாலை இரு புறங்களிலும் வளர்ந்து இருக்கும்.


 சாலையின் ஓரங்களில் வளர்ந்து  இருக்கும் வேப்ப மரத்தின் கன்றுகளை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வரவும் . வீட்டில் ஒரு தொட்டியில் மணல் இட்டு வேப்பங்கன்றை நட்டு வைக்கவும்.  முதலில் நாம் செய்யக்கூடிய வேப்பங்கன்று நடுதல் என்னும் இந்த செயல் நமது வாழ்வினில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் .

 நம்முடைய அகமும் புறமும் தூய்மையாகும். எதிர்மறை எண்ணங்கள் நம்மை விட்டு விலகும். எப்போதும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலவுவதற்கான தொடக்கமாக ஆடி மாதம் அனைவருக்கும் கண்டிப்பாக அமையும்.


 அம்மனுக்கு பிடித்தமான வேப்பிலை




 வேப்பிலையின் வாசம் இருந்தால் போதும் அம்மனவள் ஆனந்தமாய் வந்து நம் வீட்டில் குடி புகுவாள் . இந்த ஆடி மாதம் முழுவதும் நம்மால் முடிந்த அளவு வேப்பிலை தோரணங்கள் வாசலில் கட்டுங்கள்.  பூஜை அறையில் வேப்பிலை வழிபாடு , அம்மனுக்கு வேப்பிலை மாலை என வேப்பிலையில் மணம்( மனம்) காணுங்கள் . 

 வேப்பிலை தோரணங்கள் கட்டுவதால் என்ன பயன் கிடைக்கும்?





ஆங்கில மருத்துவம் காணாத அன்று மக்கள் அறிந்த பெரும் மருத்துவமே வேப்பிலையாகும். அம்மனின் தெய்வீக அம்சமாக நோய் கண்ட மருந்தாக திகழ்கின்ற அற்புத மூலிகைதான் வேப்பிலை.

வேப்பிலை பல நோய்களை தீர்க்கும்.  மனவேதனையை மாற்றும் . மங்கல மணம் வீசும் . பசுமையான வாழ்க்கையைத் தரும்.

வேப்பிலை மரம் வீட்டில் இருந்தால் அந்த வீடு சுபிட்சம் பெறும்.  வெள்ளிதோறும் சுமங்கலி பெண்கள் வேப்பிலை மரத்தை மஞ்சள் குங்குமம் இட்டு அம்மனாக வழிபடும் அற்புதமான தமிழ் கலாச்சாரம் இன்றும் கிராமத்து புறங்களில் பார்த்து மகிழலாம் .

மரம் அமைக்க வசதி இல்லாது இருந்தாலும் ஒரு தொட்டியில் வேப்பிலை ஒன்றினை  வைத்து வழிபட,  நம்முடைய வாழ்க்கையும் படிப்படியாக வளம் பெற்று வாழ்வினில் சிறப்பு பெறுவதை பார்க்கலாம்

 அம்மனுக்கு உகந்த வேப்பிலையின் புகழை இந்த ஆடி மாதத்தில் நாம் படிப்பதே நாம் செய்த பாக்கியம் ஆகும் .

நன்றி பாலாக்க்ஷிதா 🙏🌷

Copy rights of balakshitha 









திங்கள், 16 ஜூன், 2025

முருகப்பெருமானின் அறுபடை வீடுகள்

 


முருகப்பெருமானின் அறுபடை வீடுகள்

திருப்பரங்குன்றம் 

 



முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு

என மிகவும் புகழ்பெற்ற திருத்தலம் திருப்பரங்குன்றம் 

அந்தத் திருத்தலத்தில் தான் முருகன் தெய்வானையை

மணந்து திருமண கோலத்தில் காட்சி தருகிறார்.

முருகன் என்றால் அழகு.  அழகு என்றால் முருகன். 

அவருக்குத் துணையாய் மனைவியாய் தெய்வானையோடு

பக்தர்களுக்கு அருள் பாவிக்கின்றார். 


முருகன் தெய்வானையை ஏன் திருமணம் புரிந்தார்?

 தேவர்கள் அசுரர்களிடம் சிறை பட்டுத் துன்புற்றபோது

முருகப்பெருமான் சூரசம்ஹாரம் புரிந்த தேவர்களை

காப்பாற்றுகிறார்.  அதனால் மகிழ்ச்சியுற்று,  இந்திரன்

தன் மகளாகிய தெய்வானையை முருகப்பெருமானுக்கு

நிச்சயம் செய்கிறார். திருப்பரங்குன்றத்திலே மிகவும்

கோலாகலமாய் முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும்

திருமணம் நடைபெறுகிறது அப்படிப்பட்ட புகழ்பெற்ற

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்

முதல் படை வீடாகப் புகழ்பெற்று விளங்குகிறது. 

.


 

ஞாயிறு, 8 ஜூன், 2025

முருகனை நினைத்து முறையாக விரதம் இருக்கும் முறை


 முருகப்பெருமானை நினைத்து முறையாக விரதம் இருக்கும் முறை



அழகிய அரைஞான் ஆட -மார்பினில் உள்ள பூணூல் ஆட- மணம்  நிரம்பிய கடம்ப மாலை  ஆட -இடையாட- தோள் வளையாட- விளங்கும்  குழை ஆட -பன்னிரு  கைகளும் ஆட  - தாமரை மலர் போன்ற பன்னிரு  விழிகளோடு நெற்றிக்கண்  ஆறும் சேர்ந்தாட- மலர்ந்த  அழகிய வாய்இதழ்  ஆட- வேலாட- மயிலாட- நான்கு வேதங்களும் ஆட -அதைக்கண்டு நம்மையும் ஆட வைக்கும் முருகனின்  அழகுக்கு ஈடு இணை ஏது!

குமரகுருபரர்




தமிழ் கடவுள் ஆகிய முருகப்பெருமானை வணங்கினால் வாழ்க்கையில் அனைத்து கவலைகளும் பிரச்சனைகளும் தீர்ந்து சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை சஷ்டி மற்றும் வைகாசி விசாகம், கந்த சஷ்டி ஆரம்பம் சூரசம்காரம் ஆகியவை முருகப்பெருமானுக்குரிய சிறப்பு தினங்கள் ஆகும் .


முருகப்பெருமானுக்குரிய அந்த சிறப்பு தினங்களில்

நாம் எவ்வாறு விரத முறைகளை கடைப்பிடிக்கலாம் என்பதை பற்றி பதிவினில் அறிந்து கொள்வோம்.

1- நம்முடைய காரியம் ஜெயம் ஆக  முருகனை வேண்டிகொண்டு விடிகாலை எழுந்து-ஸ்நானம் முடிந்தவுடன் ஆலயம் சென்று அர்ச்சனை வழிபாடுகளோடு  ஆரம்பித்தல் சிறப்பு.


2 - விநாயக பெருமானை வேண்டி அதன் பிறகே  நாம் விரதம் இருப்பதற்கான எம்பெருமான் முருகனை வேண்டுதல் மிக சிறப்பு. .


3‌-  நெற்றியிலே விபூதி குங்குமம் அல்லது சந்தனம் என குளிர்ந்து  நிறைந்து இருத்தல் விரதத்திற்கு உரிய தனிச்சிறப்பு .


 4 -  காலை மாலை விளக்கேற்றி முருகனின் புகழ் பாடி -கந்தபுராணம் கந்த சஷ்டி மனமுருகி மெய் கனிந்து படித்தல் விரதத்திற்கு சிறப்பு.


 5 - முருகனையே நினைத்து   காலை உணவை தவிர்த்து மதியம் ஒருவேளை உணவு உண்டு இரவில் பால் பழம் என அல்லது டிபன் எடுத்துக்கொள்வது முறையான விரதம் இருப்பதற்கான  சிறப்பு .


6 - விரதம் இருக்கும் பொழுது கோபப்படுதல், தவறாக பேசுதல்  கூடாது முடிந்தவரை மௌன விரதம் இருந்து அவசியத்திற்கு மட்டுமே பேசுவது என்பது விரதத்திற்கே சிறப்பு.





இப்படி முறையாக முருகப் பெருமானுக்குரிய சிறப்பு தினத்தில் முருகனை நினைத்து விரதத்தை முறையாக எடுத்துக்கொண்டு , நாம் ஒரு வேண்டுதலை இறைவனிடம் வைத்தால் அளவில்லாத ஆனந்தம் கொண்டு கந்தன் கடம்பன் கதிர்வேலன் முருகன் என அன்போடு அழைக்கப்படும் மயில் மீது அமர்ந்திருக்கும் எம்பெருமான் குமரனவன் பலனை இனிதே நிறைவேற்றி வாழ்க்கையில் ஒளியேற்றி கவலையெல்லாம் நீக்கி அருள்புரிவான்.





விரத தினத்தன்று முருகனையே நினைத்து ‌மனதை ஒரு நிலைப்படுத்தி,  உபவாசம் இருந்து,  சிந்தை தெளிவாகி ஒழுக்க அறநெறிகள் தான் கொண்டு வாழ்வோம். இம்மை மறுமையிலும் இறை அருள் பெற்று இனிதாக வாழ்ந்து நம்முடைய வாழ்வின் பிறவிப்பயனை இனிதே பூர்த்தி செய்து நிறைவு காண்போம்.


நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹


சனி, 31 மே, 2025

திருமணத்திற்கு முன்பு செய்யவேண்டிய மங்கல நிகழ்ச்சி முகூர்த்தக்கால் நடும் விழா

முகூர்த்தக்கால் (பந்தக்கால்) நடும் விழா பற்றிய முழு விளக்கங்கள்






நம்முடைய வாழ்க்கையின் அழகான ஒரு பந்தம் திருமணம்.   

திருமணத்திற்கு முன்பாக முகூர்த்தக்கால் அதாவது பந்தக்கால் நடும்விழா என்பது முதன் முதலில் நாம் செய்யக்கூடிய ஒரு ஐதீகமான விஷயமாகும். 

அன்றைய தினத்தில் நாம் என்ன சம்பிரதாயங்கள் செய்ய வேண்டும் என்பதை பற்றி விளக்கமாக காண்போம்.







திருமண பந்தம் சிறப்பாக அமைந்து தம்பதியர் ஆயுள் முழுவதும்  மகிழ்ச்சியாய் வாழ்வதற்கு நம் முன்னோர்கள் செய்து வந்த ஐதீகமான வழக்கம்தான் இந்த முகூர்த்தக்கால் நடும் விழா என்று சொல்லக்கூடிய பந்தக்கால் விழா நிகழ்வு .


பெண்வீட்டார் மணமகன் வீட்டிற்கு சொந்த பந்தங்களோடு சென்று பந்தக்கால் நட்டு திருமண நிகழ்ச்சிகளை தொடங்குகின்ற ஒரு அருமையான சுப நிகழ்ச்சியையே முகூர்த்தக்கால் நடும் விழா என்று அழைக்கிறோம். 

திருமணத்திற்கு முன்பாக கண்டிப்பாக நாம் சொல்லக்கூடிய குலதெய்வ ஸ்லோகம்🙏🌹👇👇


https://balakshitha.blogspot.com/2019/08/blog-post.html


திருமணத்திற்கு முன்பாக பெற்றோர்கள் முதலில் யோசிக்க வேண்டியது என்ன?




மணமகளுக்கு மணமகனை  பிடித்து போக மணமகனுக்கோ  மணமகளின் அம்சத்தில் முழுமையான திருப்தி பெற,  இரு வீட்டாரும் சேர்ந்து திருமணம் நடத்துதல் என்பது மிக உத்தமம்.

ஜாதகம் ஒரு சில குறையிருப்பின் அதற்கான நிவர்த்தி பரிகாரங்கள் முடித்தபின் இந்த சுப நிகழ்ச்சி நடப்பது மிக சிறப்பு .

முகூர்த்தக்கால் நடும் இந்த மங்கல நிகழ்ச்சி நாம் எதற்காக செய்கின்றோம் என்பதை முழுமையாக அறிந்து செய்தோமானால் ..

நம்முடைய ஆத்மாவின் அபரித சக்தியும் செய்கின்ற காரியத்தில் ஐக்கியமாகி..

செய்கின்ற செயல்  சிறப்பாக திருமண பந்தம் முறையாக தம்பதிகள் வாழ்வு இனிமையாக அவர்களின் வாழ்வு வளமாக அமையும் என்பது திண்ணம்.

பந்தக்கால் நடும் விழா எப்பொழுது நடத்த வேண்டும்?




திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக நல்ல நாள் பார்த்து பந்தக்கால் நடும் விழாவினை நிகழ்த்துவது சிறப்பு.


 சூழ்நிலைக்கேற்ப வசதிக்கேற்ப பத்திரிக்கை அடித்து அல்லது நேரிலோ சென்று இந்த மங்கல நிகழ்ச்சிக்கு சொந்த பந்தங்களை வரவேற்கலாம் .

(இன் முகம் ஒன்றே இனிய நிகழ்ச்சிக்கும் இசைந்தேறும்  என்பது இந்த மங்கல நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு தரும்)




பந்தக்கால் நடும் விழா அன்று நாம் செய்ய வேண்டியது என்ன?

திருமணத்திற்கு ஒரு வாரத்திருக்கு முன்பு நாள் பார்த்து பிரம்ம முகூர்த்த வேளையில்- (4/30மணியில் இருந்து 6மணிக்குள்) பந்தக்கால் நடும் விழா என்று சொல்லக்கூடிய முகூர்த்தக்கால் நடும் விழா நடத்த வேண்டும் .

இந்த மங்கல நிகழ்ச்சி மணமகன் வீட்டாரால் செய்யப்பட வேண்டும்.

 பெண் வீட்டார் தங்கள் சொந்த பந்தங்களை தன் வீட்டிற்கு  வரவழைத்து அனைவரும் தாங்கள் பெண் வீட்டார் என சேர்ந்து,  மாப்பிள்ளை வீட்டிற்கு செல்ல வேண்டும்.

 பட்டுப் புடவை மஞ்சள் குங்குமத்தோடு தலையில் பூச்சூடி மங்கலகரமான சுமங்கலிகள் என பெண் வீட்டார் 9 பேர் 11 என ஒற்றைப்படை வரிசையிலே  அழைத்து இந்த மங்கல நிகழ்ச்சியை செய்வது சிறப்பு .



மூங்கில் கழி  என்று சொல்லக்கூடிய 2 கழிகளை  முன்பே தேர்வு செய்து கொள்க.

மூங்கில் கழிகளை நாம் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

திருமணத்தில் இணையும் தம்பதிகளின் வாழ்க்கை மூங்கில் போல வளர்ந்து சிறப்பாக அமைதல் வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் மூங்கில் கழியை  தேர்ந்தெடுத்தனர்.

மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்ற  பெண்வீட்டார் மூங்கில் கழிகளை தண்ணீரினால் சுத்தம் செய்து  மஞ்சள் குழைத்து ஏறு முகமாக பூசி  சந்தனம் குங்குமம் கீழிருந்து மேலாக  வைத்தல் சிறப்பு

மலர்களோடு கூடிய மாவிலை சேர்த்து இரண்டு கழிகளிலும் மஞ்சள் பூசிய நூல் கொண்டு கட்டி காசு முடிப்போடு கூடிய வெள்ளை சரிகை துணியை மூன்று முடிச்சு என கழிகளோடு சேர்த்து  கட்டி தெரு வாசலில் ஒரு கழியையும் -
வீட்டின் உள் வாசலில் ஒரு கழியையும் அரசாணை கால்களாக நடவேண்டும்.

குறிப்பு ( முதல்நாளே இந்த அரசங்கால் நடுவதற்கு தேவையாக உள் வாசலிலும் -தெரு வாசலிலும் சுவற்றை ஒட்டி செங்கற்களால் தொட்டி போல் அடுக்கி  அதனுள் மண் கொட்டி வில்வ இலையும் அருகம்புல்லும் வைத்து அதன் மேலும் மண் நிறைத்து கொள்ளவும்.)

 வீட்டின் உள் வாசலில் குத்து விளக்கு ஏற்றி மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலை பாக்கு , பழம்,  தேங்காய் உடைத்து சாம்பிராணி வத்தி ஏற்றிவைத்து- பிறகு இந்த மங்கல நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பதே மிக உத்தமம்.

விளக்கம் - பந்தகால் நிகழ்ச்சியை நாம் முறையாக செய்யும்பொழுது மும்மூர்த்திகளான பிரம்மா விஷ்ணு ருத்ரன் அனைவருக்கும் இந்த அரசாணை கால்களில் மூன்று முடிச்சு என அர்ப்பணித்து  இந்த தெய்வ அம்சமான சூழ்நிலையில் அவர்களே தம்பதி சமேதராய் நேரில் வந்து திருமணம் இனிதாக நடக்க தம்பதியரை வாழ்த்துவதாக ஐதீகம்.


 பாலிகைமுளை இடுதல் விழா




இந்த மங்கல நிகழ்ச்சிகள் மிக முக்கியமாக ஐந்து பஞ்ச லோகங்கள் (பவுன், வெள்ளி, செப்பு, பவழம்,  முத்து) குண்டுமணிகள் கடையில் வாங்கி கொள்ள வேண்டும்.


 நெல் , உளுந்து ,கொள்ளு , பச்சைப்பயிறு என நவதானியங்களை முதல்நாளே  ஊற வைத்து கொள்ளவும்.


பந்தல்கால் நடும் அன்று  பந்தக்கால் நட்டு முடித்தவுடன் நவதானியங்களும் பால் சொம்பும் வைத்து மணமகன் வீட்டாரின் சுமங்கலிப் பெண் வைத்திருக்க -

உள் வாசலிலும் -வெளி வாசலிலும் பந்தகால் நடுகின்ற அந்த மண்ணிலே பஞசலோகத்தை இட்டு ..

 பந்தக்கால் நட்ட  சுமங்கலி
பெண்மணிகள் நவதானியங்களை அள்ளி மண்ணிலே தூவி , சிறிது பால் ஊற்றி

 குலதெய்வத்தை வேண்டி தம்பதியரை  வாழ்த்துவதே இந்த பாலிகை இடுதலின் சிறப்பு.

 விளக்கம்- ‌ முளைத்து வரும் தானியங்கள் போன்று -தம்பதியர் தொடங்கக் கூடிய வாழ்க்கை சிறப்பாக முத்து போன்ற நன்மக்களை ஈன்று வாழ்க்கையை இனிதே  நடத்த வேண்டும் என்பதே இந்த பாலிகை இடுதல்  எனும் மங்கல நிகழ்ச்சி ஆகும்.


நெல் குத்தும் நிகழ்ச்சி



ஒரு பெரிய பாத்திரத்தில் நெல் நிறைத்து மூன்று பானைகள் மூன்று அடுப்பு -3 பல்லா- ஒரு பெரிய உரல், இரண்டு உலக்கை அனைத்திலும் மஞ்சள் பூசி குங்குமம் வைத்து மலர் நிறைவாக சுற்றி  உள் வாசலில் பச்சரிசிகோலம் போட்டு முதல் நாளே தயார் செய்து கொள்ளவேண்டும்.


விளக்கேற்றி  மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து சாம்பிராணி ஏற்றி தேங்காய் உடைத்து -பந்தக்கால் நட்ட பின்னர் சூடம் ஏற்றி படைத்த பின்னரே இந்த நெல்குத்துதல் நிகழ்ச்சி நடைபெறும் .

பந்தக்கால் நட்ட பெண் வீட்டார் சுமங்கலி பெண்கள் இருவர் இருவராக படியினால் நெல்மணிகளை அள்ளி மூன்று பானைகளிலும் உரலிலும் நிறைத்து உலக்கையால் இருவரும் சேர்ந்து மூன்று முறை குத்துதல் சிறப்பு.

 அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்தல் மிக மிக உத்தமம்

 இதுபோல சுமங்கலி  பெண்மணிகள் இருவர் இருவராக சேர்ந்து குத்தி தாம்பூலம் பெறவேண்டும்.

விளக்கம்   - ‌எங்கள் வீட்டு திருமகள் இந்த வீட்டு மகாலட்சுமி ஆக செல்வத்தை குவிப்பவளாக என்றும் வாழ்க்கையை சிறப்படையச் செய்வாள் என பெண்வீட்டார் ஆனந்தத்தோடு நெல் மணிகளை குத்துதல்  மூலமாக தெரிவிப்பதே இந்த நெல் குத்துதல் நிகழ்ச்சி ஆகும்.


பிறகு அனைவருக்கும் விருந்து படைத்து முகூர்த்தக்கால் நிகழ்ச்சியை நிறைவு செய்தல் சிறப்பு.

குறிப்பு (இந்த முகூர்த்தக்கால் நடும் விழாவில் குத்துகின்ற நெல் ஒரு படி அளவிற்கு எடுத்து அவித்து -நிழலில் காயவைத்து -குத்தி அந்த அரிசியை திருமணத்தன்று  மணப் பொங்கல் பொங்கி வாழையிலையில் வைத்து படைக்க வேண்டும்)


திருமணத்திற்கு முன்பு முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய குலதெய்வ வழிபாடு 🙏🌹👇👇


https://balakshitha.blogspot.com/2019/11/part-1.html


மேலும் படிக்கலாம்..

சொந்தமாக வீடு மனை வாங்க அதற்கான பரிகாரங்கள் 🍀🌹👇

https://balakshitha.blogspot.com/2020/09/blog-post_27.html


இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.

லட்சக்கணக்கில் செலவு செய்து செய்யக்கூடிய திருமணத்தில் பலருக்கும் படித்து பயன்பெறக்கூடிய மிக அருமையான இந்த புத்தகத்தை அன்பளிப்பாக கொடுத்து வாழ்வினில் கனிந்த மகிழ்ச்சிதனை  நாம் பெறலாம்.

‌அணுகவும் 8124152666

💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐

https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2ds

வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு புத்தகத்தை Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்துப்பயன் பெறலாம்🌹🍀👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

Copy rights at balakshitha










திங்கள், 5 மே, 2025

ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் பாடல் -16

 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 

பாடல் -16

நாயகனாய் நின்ற நந்தகோபனுடையகோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரணவாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறைமாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீநேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.

திருப்பாவை பாசுரத்தின் பொருள் விளக்கம்....

எம்பெருமான் நாராயணனின் திருமுகத்தை தரிசனம் காண ,  பாசுரம் பாடியவாறு தன் தோழியரோடு வருகின்றாள் கோதை .

அங்கிருக்கும் வாயில் காப்பாளனை பார்த்ததும் கூறுகின்றாள்;

" எம்முடைய தலைவன் நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! அழகிய  கொடி தோரணங்கள்  கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான என் தோழியரோடு வந்த எமக்காக  இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக.

மாயச்செயல்கள் செய்பவன், கரிய நிறத்தவன் என பெயர் பெற்ற கண்ணபிரான்  எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை   தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்லவே  நாங்கள் அதிகாலை நீராடி பாவை நோன்பு மேற்கொண்டு வந்திருக்கிறோம். எம்பெருமானை  துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம்.

முடியாது என முன்பே நின் வாய்மொழி மறுக்காமல்  மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்காக திறப்பாயாக " என்று பணிவன்போடு வாயிற்காப்பானை கோவிலின் கதவை திறக்குமாறு வேண்டுகின்றாள்.

நமக்கு ஒரு செயல் பிடிக்காத போதும் அபசகுனமாக முன்பாகவே  பேசாமல் நிதானமாகபேசி   எடுத்து புரிய வைக்க வேண்டும் என்று இந்தப் பாடலில் அறிவுறுத்துகின்றாள் ஆண்டாள்.

காரியத்தில் கண்ணாய் இருக்க வேண்டும்.  நாம் ஒரு காரியம் நிறைவேற்ற வேண்டும் என்றால் ஆண்டாளின் வழியை  பின்பற்றுக .

கண்ணனை மாலையிட  துடிக்கின்றாள் கோதை . சிறுவயதில் தினம் ஒரு பாமாலை பாடி பூமாலை தொடுத்து முதலில் தான் சூடி, பிறகு கண்ணனுக்கு சூடி அழகு பார்த்தாள்.

அடுத்து கண்ணனை அடைவதற்கு பாவை நோன்பிருந்து  மார்கழி குளிரில் அதிகாலை தூக்கம் கலைந்து குளிரில் நீராடுவது என்பது மிகுந்த சிரமம் என்றாலும் அனைத்தையும் முறையாக பின்பற்றுகின்றாள்.  முடிவில் வெற்றி பெறுகின்றாள். இதுதான் லட்சியம் வெற்றி பெறுவதற்கான பாதை

துன்பம் வந்தால் துவளாது , இன்பம் கண்டால் நெகிழாது  சமநிலையில்‌ மனம்  வைத்து , லட்சியம் நிறைவேற  அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக சிந்தித்து செயலாற்றி வெற்றி பெறுவோம்.

ஓம் நாராயணனே போற்றி 

ஓம் நந்தகோபனே  போற்றி

ஓம் சிந்தை தெளிவாய் போற்றி

ஓம் சித்தம் காப்பாய் போற்றி

 சிறப்பான வாழ்வு நீ தருவாய்போற்றி போற்றி.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹


செவ்வாய், 15 ஏப்ரல், 2025

16- 4- 2025 சங்கடஹர சதுர்த்தி

 


16–4–2025 சங்கடஹர சதுர்த்தி


நான் பிறந்த கதை கேளீர்


விநாயகர் பெருமான் பிறந்த வரலாறு





 புத்திசாலி  பலசாலி 

 எனப் புகழ் பெற்ற 

மழலை வேண்டுமென 

 பார்வதி அம்மையார் ஆசைப்பட்டு

பிடித்து  வைத்தாள் 

ஒரு மஞ்சள் பிடி.


அப்பிடியோ 

குழந்தையாக உருமாற … ஆசையோடு 

ஓடி வந்த உமையானவள் 

அன்போடு தூக்கி 

கொஞ்சுகின்றாள்! 

கணேசன் *என்று 

பெயரிட்டு  மகிழ்கின்றாள்*


"யாரும் உள்ளே புகா வண்ணம் 

பார்த்துக்கொள்ள டா" 

என் மகனே 

என ஆணையிட்டு 

குளிக்கச் சென்றாள்.


வந்தார் சிவபெருமான் 

தடுத்தான்  கணேசன் 

கோபம் கொண்டார்  

சிவபெருமான்.


எகிறியது கணேசன் தலை

 துடிக்கின்றாள் பார்வதி.

 "வடக்கு திசை பார்த்து 

வேறொரு பாலகனின் 

தலையைக் கொண்டு 

வந்து உயிர் கொடுப்பேன் 

என் மகனுக்கு " என

கைலாயநாதர் ஆணையிட …


 'பாலகன் தலை கிடைக்காது'

 கொண்டுவந்தனர் 

கெஜேந்திரன் தலையை

உயிர் கொடுத்தார் 

சிவபெருமான் 

உலகத்தையே காத்தார்

வினாயகப் பெருமான்


அப்படிப்பட்ட 

உலகத்திற்கே நாயகனான 

விநாயகப் பெருமானை 

சங்கடஹர சதுர்த்தியில்

வணங்குவோருக்கு 

துன்பங்கள் அனைத்தும் 

நீக்கி  நல்லருள் புரிவான் 

விநாயகப் பெருமான். 


 விநாயகப் பெருமானை வணங்குவதன்

 மூலமாகத் தடைகள் அனைத்தும் நீங்கும்.

 நினைத்தது நிறைவேறும் .உள்ளத்தில் ஒளி உண்டாகும். 

வாழ்க்கையில் சிறப்பு உண்டாகும்.


நன்றி பாலாக்க்ஷிதா


   

புதன், 9 ஏப்ரல், 2025

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டியது அவசியமா ?

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டியது அவசியமா?

ஒவ்வொரு பெற்றோரும் "  நீராரும் கடலுடுத்த நிலமடந்தை..."  எனத் தொடங்கும் தேசிய பாடல் ஆன தமிழ்த்தாய் வாழ்த்து பிள்ளைகளுக்கு கற்றுத் தருவது மிகவும் முக்கியமானது ஆகும்.

 ஏன் தமிழ் தாய் வாழ்த்து கற்றுத் தர வேண்டும்?

1. தமிழ் மொழி மீதான பற்று நம் பிள்ளைகளுக்கு ஏற்படுவதற்கு தமிழ்த்தாய் வாழ்த்து கற்றுத் தருவது மிகவும் அவசியமானதாகும். 

2. தமிழ் மொழியின் இனிமையும் மரபும் குழந்தைகளுக்கு மனதில் பதிகிறது.

3. பண்பாட்டை சுமந்த பாடலாக கவிதை அமைந்துள்ளது .

4. இந்த பாடல் தமிழர்களின் பழமை,  நிலம், மொழி , கலாச்சாரம் ஆகியவற்றை பற்றி பேசுகிறது.  இது குழந்தைகளுக்கு தமிழர் பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பாகவும் அமைகிறது. 

5.  முன்னோர்களின் பெருமை  உணர்த்துகின்றது.

 6. பாடலின் வரிகள் தமிழர்களின் வீரமும் நாகரீக வளர்ச்சி செய்யும் புகழ்கின்றன இது நாட்டுப் பெருமையை உணர்த்தும்.




திங்கள், 7 ஏப்ரல், 2025

பிள்ளைகளுக்கான பொது அறிவு அதிகரிக்க வேண்டுமா!

 

5 முதல் 10 வயது பிள்ளைகளுக்கான பொது அறிவு அதிகரிக்க வேண்டுமா! 




பெற்றோர்களுக்கான வழிகாட்டி 

அன்புள்ள பெற்றோர்களுக்கு வணக்கம் . உங்கள் பிள்ளைகளுக்கு படிப்புடன் கூடிய பொது அறிவை வளர்ப்பதற்கு பெற்றோராகிய நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
அதற்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன! உங்கள் குழந்தைகள் அவர்களை பற்றிய விவரங்களை அவர்களே சொல்வதற்கு கற்றுக் கொடுங்கள். 



  1. தன்னைப் பற்றி அறிவது:

    • பெயர்

    • வயது

    • தந்தையின் பெயர்

    • தாயின் பெயர்

    • வீட்டின் முகவரி

    • பள்ளியின் பெயர் & வகுப்பு

    • பெற்றோர் தொடர்பு எண்

ஒன்று முதல் பத்து வயது வரை உள்ள பெற்றோர்களின் கவனத்திற்கு 

உங்கள் பிள்ளைகள் அறிந்திருக்க வேண்டிய அடிப்படை தகவல்கள்

நாம் அனைவரும் அறிவாளிகளாக வளர வேண்டும் என்பதற்காகவே கல்வியை கற்றுக் கொள்கிறோம். ஆனால் கல்வியுடன் பொது அறிவும் (General Knowledge) மிக முக்கியம்! அதற்கான முதல் அடிப்படை குழந்தைகளுக்கு தங்களைப் பற்றி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

எதை முதலில் கற்றுக் கொடுக்க வேண்டும்?

  1. தன்னை அறிமுகப்படுத்தும் திறன்

    • என் பெயர் என்ன?

    • எனது தந்தை, தாய் பெயர்

    • நான் எந்த பள்ளியில், எந்த வகுப்பில் படிக்கிறேன்?

    • எனது வயது, பிறந்த தேதி

இரண்டாவதாக  தயங்காமல் மற்றவர்களிடத்தில் தைரியமாக பேசுவதற்கு உங்கள் குழந்தைகளை நீங்கள் தயார் படுத்துங்கள்


    •  எனக்கு  பிடித்த விஷயம், பிடித்த உணவு, பிடித்த விளையாட்டு

 என்ன என்பதையும் உங்கள் பிள்ளைகள் சொல்லும்பொழுது பிள்ளைகளின் அறிவுத்திறன் மேம்படுகிறது.




  1. எந்த சூழலில் உங்கள் பிள்ளைகள்  பேச தெரிந்து கொள்ள வேண்டும்?

    • குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்களிடம்

    • பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள் முன்பு

  2. அதுபோல்

    • பொதுவாக நிகழ்ச்சிகளில்,  மற்றும் போட்டிகளில்   கலந்து கொள்வதற்கும்  இந்த கோடை விடுமுறை காலத்தில் உங்கள் பிள்ளைகளை தயார் படுத்தலாம்.





  1. எழுதிக் பழகுவதன் முக்கியத்துவம்

    • குழந்தைகள் தங்களை பற்றிய விவரங்களை எழுத வைப்பது முக்கியம்.

    • இது அவர்களின் மதிப்பீடு எழுதும் திறனை வளர்க்க உதவும்.

    • பள்ளி தேர்வுகளிலும், பேச்சுத்திறன் போட்டிகளிலும் இது உதவியாக இருக்கும்.


இந்தக் கோடை விடுமுறை உங்கள் பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் ஒரு பாலமாக அமைய வேண்டும் உங்கள் பிள்ளைகளை வழி நடத்துவதற்கான நேரமாக நினைவில் கொண்டு மிகுந்த பயனுடன் செலவிடுங்கள்.


அதற்காகப் பெற்றோராக நாம் செய்ய வேண்டியது என்ன ?

 தினமும்ஒரு மணி நேரமாவது உங்கள் பிள்ளையுடன் பேசுங்கள்.
புத்தகங்களைப் படிக்க வையுங்கள்.
 குறுகிய வாக்கியங்களில், தெளிவாக பேசுவதற்கான உச்சரிப்பை கற்றுக்கொடுங்கள். கையெழுத்து பயிற்சி தினமும்  எழுத வைப்பது அடுத்தவகுப்பில் அவர்கள் திறன்பட எழுதுவதற்கு   எளிதாக கைகொடுக்கும்.


நன்றி .

பாலாக்க்ஷிதா இன்டர்நேஷனல் அகாடமி